விருந்தோம்பல் (Hospitality)
விருந்தோம்பல்
பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் போதெல்லாம் எல்லோருக்கும் விருந்து அளிக்கப் பெற்றிருப்பதாகக் காண்கின்றோம். ‘ விருந்து புறத்திருக்கச் சாவா மருந்தெனினும் தனித்து அருந்தாமை”.. என்பதே தமிழர்களின் உயர்ந்த பண்பாடு. இல்லத்திற்கு வந்த விருந்தாளி முன்புறமோ அல்லது வரவேற்பறையிலோ இருக்க, அமிழ்தம் என்று சொல்லக் கூடிய உணவே ஆயினும் அதனை வீட்டின் அடுக்களையிலோ அல்லது மறைவான இடத்திலோ, விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பது என்பது தமிழர் பண்பாடு ஆகாது என்று தெளிவாகிறது.
மண்ணுலகில் சிறப்புற விருந்தோம்பியவர்கள், இறையுலகில் இறைவனால் விருந்தோம்பப் பெறுவர் என்ற மாண்பினைத் தமிழர்கள் தலைமேற் கொண்டதினால் தான், ” அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” என்ற சங்கப்பாடல் வரி எழுந்தது.
தமிழர் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியமைக்குக் கரணியம் “யான், எனது” எனும் பற்று அற்று இருந்தமைதான். ‘ யான் எனது எனும் செறுக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்தவுலகு புகும்” என்ற தெளிவு பெற்றிருந்தமைதான். அதாவது இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற வீடு, வாசல், மனைவி, மக்கள், பொருள் இவை அனைத்துமே இறைவன் நமக்கு அளித்தது. இதில் எதனையும் நாம் இறக்கும் போது கொண்டு செல்வதில்லை! நம்மிடம் உள்ளவற்றை வாழுங்காலத்து பிறருக்குக் கொடுத்து இறவா இறைச் செல்வத்தைப் பெற வழியினைக் கொடுத்துள்ளான் என்பதனை உணர்த்திருந்தார்கள். எனவேதான் வீட்டிற்கு வந்த விருந்திற்காக எவரும் கொடுக்க முன் வராத தன் மகவை அறுத்துக் கறி சமைக்க முன் வந்தார் சிறுத்தொண்டர். “என் மகன்” என்ற பற்று இல்லாமையால் வீட்டிற்கு வந்த விருந்திற்கு அவனை உணவாக்கினார்.
இயற்பகை நாயனார்,”யாதும் ஒன்றும் என்பக்கல் உண்டாகில், அன்னது எம்பிரான் அடியவர் உடைமை; ஐயமில்லை” என்று வீட்டிற்கு வந்த விருந்தினருக்குத் தன் மனைவியைக் கொடுக்க முன் வந்தார். இறையன்பின் உயர்ந்த நிலையில் நின்ற இவ்வடியார் தம் மனைவியோடு இறையுலகம் புகுவதற்கு அடிப்படை “யான் எனது” என்ற பற்று இல்லாமல் இருந்ததுதான்.
வருவிருந்தைப் பேணுகின்ற உயரிய பண்பினைப் பெற்றிருந்தமையால் தான் மானற்கஞ்சார் நாயனார், தன் அருமை மகளின் திருமணத்திற்கு விருந்தாய் வந்திருந்த அடியவர், மணப்பெண்ணான தன் மகளின் அழகிய கூந்தலைக் கேட்ட மறுகணமே எதனையும் சிந்தியாது அறுத்துக் கொடுத்தார். அந்நாயனாரின் மகளோ, தாம் தன் தந்தையின் உடைமைப் பொருள் என்று எண்ணியமையால் தன் தந்தையின் செயலுக்குத் துணை நின்றாள். இப்பெண்ணே பின்பு ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் துணைவியாகி, விருந்தோம்பற் பண்பில் உயர்ந்து விளங்குகின்றார். தன் கணவன் இறப்பதற்குக் கரணியமான சுந்தரர் தன் இல்லத்திற்கு வருகிறார் என்று அறிந்ததும் தன் கணவரின் உடலை மறைத்து வைத்து இன்முகத்தோடு வீட்டிற்கு வந்த விருந்தான சுந்தரரை வரவேற்ற பண்பினை என்னே என்பது! இவர்களல்லவோ நம் தமிழர் பண்பாட்டின் குல விளக்குகள்!
இன்றைய சூழலில் நன்கு அறிமுகமான உறவினர்களோ, சுற்றத்தாரோ, நண்பர்களோ கூட நம் தமிழர் இல்லங்களுக்குச் சென்றால் இல்லத்தில் உள்ள அனைவரும் வரவேற்கும் பண்பினைக் காணமுடிவதில்லை! கணவரின் உறவு அல்லது நண்பர் என்றால் மனைவிக் கூட வந்து வரவேற்பது அரிதாகிவிட்டது. பிள்ளைகளோ விருந்தோம்பலில் சற்றும் தொடர்பில்லாதவர்களாய், ஒரு “வணக்கம்” அல்லது புன்னகைக் கூட பூக்காமல் அவரவர் பணிகளில் கருத்தாய் இருக்கின்றனர். இன்னும் சிலர் வரவேற்புக்கூடத்தில் இருந்தாலும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு அவர் அப்பாவின் விருந்தினர்தான் நம் விருந்தினர் அல்லர் என்று கண்டுக்கொள்ளாமலும் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழரின் விருந்தோம்பல் எனும் இறையுலகிற்கு வழிகாட்டும் உயரிய பண்பினை நம் இளைய தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோமாக!
Comments
Post a Comment